தமிழரின் விருந்தோம்பல் – அன்றும், இன்றும்

தமிழர்களின் பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்று. விருந்து என்றால் புதுமை, புதியவர் என்று பொருள். விருந்தே புதுமை என்பார் தொல்காப்பியர். வீட்டிற்கு வரும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் விருந்தினர் என்கிறோம். ஆனால் பண்டைக்காலத்தில் வீடு தேடி வரும், முன் அறியாதவர்களையே விருந்தினர் என்றனர்.
போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில், கால்நடையாகத்தான் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. அப்படிச் செல்லும்போது உணவிற்கும், தங்குவதற்கும் செல்லும் வழியில் இருக்கும் ஊர்களையே நம்பவேண்டியிருந்தது. ஆகவே புதிதாக வருவோர்க்கு பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழக இல்லங்களில் உருவாயிற்று. இப்படி வருவோர்கள் இளைப்பாறுவதற்கும், இரவு நேரங்களில் தங்குவதற்கும்தான் வீடுகளில் திண்னை வைத்துக் கட்டினார்கள்.
இன்றும் கிராமங்களில் செளமிட்டாய், ஐஸ், கொய்யாபழம், வளையல், உப்பு போன்றவைகளை விற்கும் வியாபாரிகள் வருவார்கள். அவர்கள் இளைப்பா திண்ணையில் இடமளிப்பதோடு, தண்ணீரும் தந்து உபசரிப்பார்கள். ஆனால் நகரங்களில் வீடு கட்டும்போது, தன்னுடைய இடத்தையும் தாண்டி, பக்கத்தில் ஒரு அடி, இரண்டு அடி என்று தள்ளி சுவர் எழுப்பும் நிலையில் இருக்கும்போது, திண்ணைக்கு எங்கே போவது?
விருந்தோம்பல் பண்பினை கம்பர், இராமனைப் பிரிந்து அசோகவனத்தில் இருக்கும் சீதையின் வாயிலாகக் கூறுவார்.
“அருந்து மெல்லடகு ஆரிட அருந்து மென்று அழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்
மருந்தும் உண்டு கொல் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும்
இருந்த மாநிலம் செல்லரித்திடவு மாண்டெழாதாள்”   
என்ற பாடல் விருந்தினர்வரின் தானில்லாது இராமன் என்ன செய்வானோ என்று எண்ணிச் சீதை வருந்திய நிலையைப் புலப்படுத்துகிறது.
எங்கள் வீட்டில் எப்போதும் சமைக்கும்போது, எல்லோருக்கும் போக, அதிகமாக ஒரு நபர் சாப்பிடும் அளவிற்கு சமைப்பார்கள். பாட்டியிடம் ஏன் என்று கேட்டபோதுதான், திடீரென வீட்டிற்கு ஏதேனும் விருந்தினர் வந்துவிட்டால் அவர்களுக்கு உணவளிக்கவே இந்த உணவு என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் இன்று நாங்கள் இந்த நேரத்திற்கு உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்று முன்கூட்டியே தகவல் சொல்லாமல் சென்றாலோ, இல்லை வீட்டுப் பெண்கள் தொலைக்காட்சியில் சீரியல்கள் பார்க்கும் நேரத்தில் சென்றாலோ, சென்றவர் பாடு திண்டாட்டம்தான்.
நமது முன்னோர்கள் காலத்தில் கணவன் மனைவியிடையே எழும் ஊடலைத் தீர்க்கும் மருந்தாகவே விருந்தினர் அமைவர் என்று சொல்லப்பட்டுள்ளது. விருந்தினர் வந்தால், இருவரும் ஊடலை மறந்து கவனிப்பராம். ஆதலால் தன் மனைவியின் ஊடலைத் தீர்க்க யாரேனும் விருந்தினர் வரமாட்டார்களா என்று கணவன் ஏங்குவதாக நற்றினை கூறுகிறது.
விருந்தோம்பலுக்குத் தனி அதிகாரமே தந்த வள்ளுவர், முகர்ந்து பார்த்தாலே வாடிவிடக் கூடிய தன்மை படைத்தவர் விருந்தினர் என்றும், அவர் முகம் வாடாமல் விருந்தோம்பல் செய்யவேண்டும் என்பதை
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”
என்பார்.
தொன்றுதொட்டு விளங்கும் விருந்தோம்பலை நாம் வளர்ப்போம்! நமது குழந்தைகளுக்கும் கற்றுத் தருவோமாக!

You May Also Like

About the Author: IniyathuAdmin