அழிந்துவரும் பாராம்பரிய உணவு முறை!

இலங்கை….. மிக நீண்ட கால  பாரம்பரிய சிறப்புக்களை கொண்ட நாடுகளில் ஒன்று. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பெறுமையை தன்னகத்தே கொண்ட இலங்கையின் பாரம்பரிய உணவுக்கென தனிச் சிறப்புண்டு. எனினும் நவீன காலமானது இலங்கை வாழ் மக்களை ஒரு மாய வலைக்குள் சிக்க வைத்துவிட்டதா என்ற எண்ணத் தோன்றுகிறது. ஆம்… இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறையும் அதற்கு இடமளித்து
நவீனத்துவத்துக்குள் தம்மை தொலைத்துக்கொண்டிருக்கும் முன்னைய தலைமுறையும் நாம் எமது தனித்துவத்தை இழந்து வருகின்றமையை கண்கூடாக காட்டும் சாட்சிகளாகவே பார்க்க வேண்டும்

 

சிறந்த கலாசார செலுமையைும் வளங்களும் நிறைந்த இலங்கை இன்று  அனைத்துக்கும் வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்பதை பார்க்க முடிகிறது. தேசிய உணவு, தேசிய உடை, கலாசாரம் என்பன ஊக்குவிக்கப்படவேண்டியதொன்றாக காணப்படுகிறதே தவிர…. அன்றாடம் நாம் கடைப்பிடிக்கும் விடயமாக இல்லை. பல்லின மக்கள் வாழும் பல்லின கலாசாரத்தைக் கொண்ட எமது நாட்டில் உள்ள பல்லினத் தன்மைகள் மாறுபட்டு வேறொங்கோயிருந்து புதிய கலாசார வாழ்க்கைமுறை உள்நுழைந்துக்கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இதில் கடுமையான பாதிப்புக்குள்ளான ஒரு விடயமாகவே பாரம்பரிய உணவு முறையை நாம் காணலாம்.

 

நாட்டின் பல பேருக்கு இன்னும் புரியாத உலக மயமாக்கல், அதனூடாக எழுந்துள்ள வர்த்தக ஆதிக்கம், நவீன வர்த்தக திட்டங்கள் என அனைத்துக்கும் பாரிய விளம்பரத்தை வழங்கி ஊக்குவிக்கும் ஊடகம் மற்றும் இணைய ஊடகங்கள் என்பன எங்களை அறியாமலேயே எமக்குள் வேரூன்றியுள்ள உணவு பழக்க வழக்கங்களை ஆட்டம்காண செய்துள்ளது. பாதிக்கு மேல் இல்லாமல் செய்துவிட்டது என்றாலும் பொருத்தமாகத்தான் இருக்கும். அதனால்தான் நம் நாட்டு மக்கள் உள்நாட்டில் இருந்துகொண்டே வெளிநாட்டு  வாழ்க்கையை வாழவும் கலாசாரத்தை பின்பற்றவும் தூண்டப்படுகின்றனர். விரும்புகின்றனர்.

 

உலகம் முழுவதும் ஒரே மாதிரியான கலாசாரத்தை கட்டியெழுப்புவதே உலகமயமாக்கலின் நோக்கமாகும். அவ்வாறு கட்டியெழுப்பப்படும் கலாசாரமாக மேற்குலக கலாசாரம் காணப்படுவதை எத்தனை பேர் உணர்ந்துள்ளனர் என்பது கேள்விக்குறியே! இதனை நோக்கும் போது இது மேற்குலகத்தின் பொறிமுறையாக தோன்றவில்லையா?  தங்களுடைய சேவைகளையும் பொருட்களையும் எல்லைக்கடந்து சுதந்திரமாக கொண்டு செல்வதற்கான வசதியை ஏற்படுத்தி, அவற்றுக்கான ஊடக பிரசாரத்தையும் வழங்குகிறது மேற்குலகம். அதனூடாக கிடைக்கும் இலகுத்தன்மை மற்றும் நன்மைகளை காரணமாக காட்டி மக்களின் ஆர்வத்தை தூண்டி பயன்படுத்துவதற்கான ஏதுவான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கின்றனர். இதனால் மேற்குலக நாடுகளின் பல்தேசிய கம்பனிகள் தம்மை வளர்த்துக்கொள்கின்றன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

 

முன்னர் எமது நாடு வெளிநாடுகளில் கடன்பட்டிருக்கவில்லை. இன்று கடன் சுமையிலிருந்த மீள முடியாதுள்ளோம். பிறக்கும் குழந்தையும் கடனுடனேயே பிறக்கின்றது. நூதனமான முறையில் எமது நாட்டில் பரவியிருக்கும் சர்வதேச காரணிகளை ஏற்றுக்கொண்டமையும் பயன்படுத்துகின்றமையும் இதற்கு பிரதான காரணங்களாகும். தேசிய விடயங்களை புறந்தள்ளி, தெரியாதவை பின்னால் செல்லுமளவுக்கு எம்மக்கள் மாய வலைக்குள் சிக்கியுள்ளனர் என்றால் அது மிகையாகாது என்றே நான் கருதுகிறேன். குறிப்பாக எமது கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பானது நவீன தலைமுறைக்கும் முன்னைய தலைமுறைக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்தியுள்ளது. இளந்தலைமுறையினர் பின்பற்றும் புதிய கலாசார முறையானது எமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள், கலாசார முறைகள் என்பவற்றை கொஞ்சம் கொஞ்சமாக காணாமலாக்கி வருகிறது. இந்நிலை இவ்வாறிருக்கு முன்னைய தலைமுறையினரும் சிறிது  சிறிதாக நவீன கலாசாரத்துக்குள் நுழைந்து வருகின்றமையானது உலகமயமாக்கலின் நோக்கத்தை விரைவிலேயே முழுமையாக பூர்த்தி செய்துவிடும் என்பதே கசப்பான உண்மை.

 

தேசிய உணவுக்கு ஏற்பட்டுள்ள அழிவு இதற்கு சிறந்த உதாரணம். அன்றைய கிராமத்தையும் கிராமிய வீடுகளையும் இன்று காண்பதென்பது மிகவும் அரிதான விடயமாகவே உள்ளது. எமக்கே உரித்தான பாராம்பரிய மணமிக்க உணவு பழக்கவழக்கங்களுக்கும் தற்போதைய நவீன வாழ்க்கை முறை சாவுமணியடித்து விட்டது என்றே கூறலாம். இது உணவு பழக்கவழக்கத்திற்கான சாவுமணி மட்டுமல்ல எமது ஆரோக்கியத்துக்குமான சாவுமணி என்பது தற்போது இலங்கையில் அதிகரித்து வரும் தொற்றா நோயின் தாக்கம் சிறந்த உதாரணமாகும். ஆரோக்கியமே சிறந்த செல்வம் என்பது சான்றோர் வாக்கு. அந்த ஆரோக்கியத்திற்கு எம் நாட்டுக்கே உரித்தான பாரம்பரிய உணவு முறைகள் மிகவும் உதவியாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எமது நாட்டின் பாராம்பரிய உணவு முறைகளில் தேசிய வைத்திய முறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்ததை நாம் புரிந்துக்கொள்ளவில்லை.

 

நவீன வளர்ச்சி என்பது அவசியம்தான். அதன் வளர்ச்சிக்கான பொறிமுறை அமைக்கப்பட்டு பாராம்பரியங்களையும் பேணுவது எந்தளவுக்கு அவசியம் என்பது மிகவும் தாமதமாகவே எமக்கு புரிந்துள்ளது.

 

எமது நாட்டின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் உணவுக்குத் தேவையான பெரும்பாலான பொருட்கள் வீட்டுத் தோட்டத்திலேயே பெற்றுக்கொண்டோம். அது தன்னிறைவின் அடையாளமாகும். இலங்கையர் பயிரிட்டு உண்ணும் பழக்கமுடையவர்களாக இருந்தனர்.  கிராமங்களை அண்டி சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து குரக்கன்,  கௌப்பி, பயறு, போன்ற தானியங்கள், ද கீரை வகை, பூசணி, மரவள்ளி, வற்றாளை போன்றவை பயிரிடப்பட்டன. நச்சுத்தன்மையற்ற சேதன பசளை பயன்படுத்தப்பட்டமையினால் அவற்றின் குணம், தரம் மாறாதிருந்தது.  அதுமட்டுமன்றி,  வாழை மரமில்லாத வீடுகளே இல்லையெனலாம். பல்வேறு மருத்துவத் தாவரங்கள் உடனியாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. வயலில் நெற்பயிர் செய்யப்பட்டது.  அறுவடையின் பின்னர் மரக்கறி பயிரிடப்பட்டது. சிலவேளைகளில் உணவாகவும் சில சந்தர்ப்பங்களில் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டன. இலங்கை பாரம்பரிய உணவுகளில் மருத்துவ குணமும் கலந்தே இருந்துள்ளமையை இதனூடாக அறியலாம்.

 

அதிக விளைச்சல் உள்ள காலங்களில் மரக்கறி, கிழங்குவகைகளை பாதுகாக்க இயற்கையான முறைகள் பயன்படுத்தப்பட்டன. இன்று உணவை பாதுகாக்க பல்வேறு இரசாயான கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. ஆனால் பாரம்பரிய முறைகள் உடலுக்கு எந்தவகை தீங்கையும் விளைவிக்காதவை. மற்பாண்டங்களில் இட்டு பதனிடுதல், மண்ணில் புதைத்து வைத்து பாதுகாத்தல் மற்றும் புகையிட்டு பாதுகாத்தல் முறைகளே அன்றைய காலத்தில் உணவை பாதுகாக்க பின்பற்றப்பட்ட முறைகளாகும். வீடுகளில் எப்போதுமே நெல் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும். பதனிடப்பட்ட பலாக்கொட்டை, கஜூ, ஈரப்பலாக்காய், பலாக்காய் எப்போதும் நிறைந்திருக்கும். குளத்து மீன்கள் சமையலறை அட்டிலில் வைத்து புகையடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. இன்று அவையனைத்தும் வெறும் தகவல்கள் மட்டுமே.

 

அன்றைய நாட்களில் குரக்கன் ரொட்டி என்பது மிகவும் சாதாரணமாக உண்ணும் உணவு. இன்று நீரிழிவு உள்ளவர்கள்தான் குரக்கன் ரொட்டி சாப்பிட வேண்டும் என்பது சம்பிரதாயம். அதிலும்  பைக்கற்றில் அடைக்கப்பட்ட குரக்கன் மாவில் என்னென்ன கலப்படமோ யாரறிவார்?

 

பொல்பலா, ரணவரா, இரமுசு போன்ற மருத்துவத்தாவரங்கள் தேநீருக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டன. இதனால் இலங்கையில் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை முறை காணப்பட்டது.

 

கடந்தாலே தொற்றாநோய்களின் இருப்பிடமாக எமது உடல் மாறி விடுகிறது.

 

சமபோஷாக்கான உணவை உண்ணுதலும் கடுமையாக வேலை செய்வதும் இயற்கையாக எம்மிடம் காணப்பட்டது. இன்று அந்நிலை மாறி அனைத்தையும் மிக இலகுவாக அடைய முயற்சிக்கிறோம். அரைத்து மாவாக்கிய குரக்கன், அரிசி மாவை கொண்டு உணவு செய்வது எமது வாழ்க்கையை இலகுவாக்குகிறது. கூடவே நோயையும் அழைத்து வருகிறது. எமது தவிர்க்க முடியாத உணவாக மாறியுள்ள பான், அன்று நாம் கேள்வியேபட்டிருதாக அமில பித்தம் என்ற நோயை மூன்று வயது குழந்தை முதல் 70 வயது தாத்தா வரை ஏற்படுத்தி சென்றுள்ளது.

 

ஊடக நிறுவனங்கள் தமது வருமானத்திற்காக பிறர் நலம் கருதாது தாராளமாக விளம்பரம் செய்து புதிய உணவு முறைகளை தோற்றுவிக்க காரணமாகியுள்ளது. ஏதேதோ உணவு வகை… குறிப்பாக இளைஞர் மற்றும் குழந்தைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுவதால் இளஞ்சமுதாயமே நோயோடே வளர்கின்றது. உணவையும் பல்தேசிய நிறுவனங்களே தயாரித்து அதனால் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளையும் அவர்களே தயாரித்து லாபம் பார்ப்பதை மட்டுமே நோக்காக கொண்டு செயற்படுகிறது.

 

எது எவ்வாறு இருப்பினும் எமது பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்களை நாம் மீறாதிருந்தால்…. எமது ஓய்வு நேரத்தை இருக்கும் சிறிய இடத்தில் பயிர் செய்யதால் நாம் ஓரளவுக்காவது ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். கொழும்பு போன்ற நகர புறங்களில் இது எந்தளவிற்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியென்றபோதிலும் எமது ஆரோக்கியம் குறித்து நாம் அக்கறை கொள்வதென்றால் இத்தகைய விடயங்களை மேற்கொண்டேயாகவேண்டியுள்ளது.

You May Also Like

About the Author: IniyathuAdmin