இயற்கை வளத்தைப் பாதுகாக்க என்ன செய்யப்போகிறோம்?

உயிர்கள் படைக்கப்பட்டபோதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்களோடே அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது. மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். இயற்கை வளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். காலம் வேகமாக மாறியது. தனிமனித உடைமைப் போக்குகள் உருவானது. அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவு, மனிதருக்கு மட்டுமே பூமி என்ற நிலை உருவானது. அதுவும் மாறி, அறிவியல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே இயற்கை வளம் யாவும் சொந்தம் என்ற நிலை உருவாகியுள்ளது.

மனிதர்களின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, பிற உயிரினங்கள் யாவும் பாதிப்படைந்து வருகின்றன. நீர், நிலம், ஆகாயம், வாயு என நான்கு பூதங்களும் மாசடைந்துவிட்டன. சீக்கிரமே, வாழ முடியாத இடமாக பூமி ஆகிவிடுமோ என்ற நிலை உருவாகி வருகிறது. வனங்கள் அழிந்து, நதிகள் வறண்டு, மலைகள் மறைந்து, கடல் நீர் உயர்ந்துபோன நிலையில், இனி எத்தனை தலைமுறைகள் இந்த பூமியைப் பார்க்குமோ என்ற கவலை எல்லோருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது. உயிர்களின்  வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் இயற்கை தருகிறது. காடுகள், நுண்ணியிரிகள், ஆறுகள், ஏரிகள், கடற்பகுதிகள், மலைகள், மண் வளம், மேகங்கள்,  ஏன் ஒவ்வொரு மழைத்துளியும்கூட இயற்கையின் கொடைதான்.  இதில், ஒன்றை இழந்துகூட மனிதர்கள் வாழவே முடியாது. வாழ அவசியமான எல்லாவற்றையும் அழித்துவிட்டு யாரோடு, எதனோடு வாழப்போகிறார்களோ தெரியவில்லை.

இயற்கையை நேசிப்பது மட்டுமல்ல, அதைப் பாதுகாப்பதும் அவசியம். இது கடமை மட்டுமல்ல, பொறுப்பும்கூட. உங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதைப்போல, இயற்கையையும் பாதுகாத்து சேர்த்துவையுங்கள்.இயற்க்கை வளங்களின் இன்றியமையாமைகுறித்து மக்களிடையே விழிப்பு உணர்வை உண்டாக்க, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28-ம் நாள் உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், இயற்கையைப் பாதுகாக்க நம்மால் ஆனதைச் செய்வோம். அதுவே, இந்த நாளுக்கான நமது மரியாதை என்று சொல்லலாம். என்ன செய்யப்போகிறோம் சொல்லுங்கள்.

 

You May Also Like

About the Author: IniyathuAdmin