தமிழன் பெருமை சொல்லும் நடனக் கலைகள்

நமது கலை கலாசாரத்தை எத்தனை விதமாக சொன்னாலும், நடனத்தின் மூலமாக சொல்லும்போது தமிழுக்கான அழகு மேலும் அதிகரிக்கின்றது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நடனங்களைப் பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். நமது பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இன்றுவரை புழக்கத்தில் இருக்கும் இந்தக் கலைகள் பற்றி நன்கு அறிந்துகொள்வோம். நமது அடுத்தத் தலைமுறைக்கு இதன் மகிமையை எடுத்துரைப்போம்.

கரகாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய நடனங்கள் பற்றி பேசினால் நமக்கு முதலில் தோன்றுவது கரகாட்டம் தான். அம்மனை மனதில் நினைத்துக்கொண்டு பலநாட்கள் விரதங்கள் இருந்து தலையில் கரகத்தை வைத்து ஆடுவதுதான் கரகாட்டம். பெரும்பாலான கோவில்களில் ஆடப்படும் கரகாட்டத்தை சக்தி கரகாட்டம் என்று கூறுவார்கள். மக்களை மகிழ்விக்கும் வகையில் ஆடப்படும் கரகத்திற்கு, ஆட்ட கரகம் எனும் பெயர் உள்ளது. தற்போது இந்த  நடனக்கலை பல்வேறு உடல் பயிற்சி நிலையங்களில்  உடலினை சீராக வைத்துக்கொள்ள கற்றுக்கொடுக்கப் படுகிறது. 1989 ஆம் ஆண்டு கரகாட்டத்தை மையமாக வைத்து வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படம் வெள்ளி விழா கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

கும்மியாட்டம்

நகரத்தில் வசிக்கும் பலருக்கும் நமது பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கும்மியாட்டம் பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம். கும்மியாட்டம் பெரும்பாலும் கிராமங்களில் திருவிழா நாட்களில் பல பெண்கள் சேர்ந்து  வட்டமாக சுழன்றபடி ஆடும் ஓர் அற்புதமான நடனக் கலை ஆகும். எந்தவொரு இசைக்கருவியும் இல்லாமல் பெண்கள் ஒரு வட்டமாக சூழ்ந்துகொண்டு கைகளைத் தட்டிக்கொண்டே இறைவனை வேண்டி பாடுவது இதன் சிறப்பம்சம் ஆகும். கும்மியாட்டம் தமிழகத்தை தவிர்த்து கேரளாவிலும் ஆடப்படுகிறது. ஊரும், ஊர் மக்களும் என்றென்றும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று இந்த கும்மியாட்ம் ஆடப்படுகின்றது.

You May Also Like

About the Author: IniyathuAdmin