நிலவில் சீன விண்கலம் சாங்’இ 4: நிலவின் துருவப்பகுதியில் தரையிறங்கும் முதல் வாகனம்

நிலவின் தொலைதூரப் பகுதியில் தமது ரோபோ விண்கலம் ஒன்றைத் தரையிறக்கியதாக சீனா கூறியுள்ளது. இது போன்ற ரோபோ விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்குவது இதுவே முதல் முறை.

சாங்’இ-4 என்ற அந்த விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள ஐட்கென் படுகையில் பெய்ஜிங் நேரப்படி காலை 10.26 மணிக்கு (2.26 கிரீன்விச் நேரம்) தரையிறங்கியதாக சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வட்டாரத்தின் மண்ணியல் வகையை ஆராய்வதற்கும், உயிரியல் தொடர்பான ஆய்வுகள் நடத்துவதற்கும் தேவையான கருவிகள் இந்த விண்கலத்தில் உள்ளன.

இந்த விண்கலம் தரையிறங்கியதை, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் என்று விவரித்துள்ளது சீன அரசு ஊடகம்.

ஏனெனில் இதுவரையில் நிலவுக்கு சென்ற விண்கலங்கள் எல்லாம் நிலவின் புவியை நோக்கிய பகுதியிலேயே தரையிறங்கின. இதுவரை கண்டறியப்படாத நிலவின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறை.

கடந்த சில நாள்களாகவே, சாங்’இ-4 விண்கலம் தரையிறங்குவதற்காக தமது சுற்றுப்பாதையை நிலவை நோக்கி தாழ்த்திவந்தது.

கடந்தவார இறுதியில் இந்த விண்கலம் நிலவை நெருங்கி நீள் வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியதாகவும், அந்நிலையில் நிலவின் தரைப் பகுதிக்கும் விண்கலத்துக்குமான குறைந்தபட்ச தொலைவு வெறும் 15 கிலோ மீட்டராக இருந்ததாகவும் சீன ஊடகம் தெரிவித்தது.

நிலவின் தொலைதூரப் பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவது என்ற முடிவு, இந்தப் பயணத்தை மிகுந்த சிக்கலும், ஆபத்தும் நிறைந்ததாக மாற்றியது. இதற்கு முன் நிலவை நோக்கி சீனா அனுப்பிய சாங்’இ-3 விண்கலம் 2013-ம் ஆண்டு நிலவின் மேர் இம்பிரியம் பகுதியில் தரையிறங்கியது. அந்த விண்கலம் எதிர்கொண்டதைவிட தற்போதைய விண்கலப் பயணம் அதிக ஆபத்தை எதிர்கொண்டது.

ஆனால், சீனாவின் இந்த சமீபத்திய நிலவுப் பயணம் மூலம் நிலவின் பாறை மற்றும் தூசி மாதிரிகளை சீனா புவிக்கு கொண்டுவரும்.

You May Also Like

About the Author: IniyathuAdmin