பண்பாட்டு ஒற்றுமையை வளர்க்கும் வழிகள்

பலவிதமான கலாச்சாரங்கள், பண்பாடுகள், வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள், உடை, உணவு பழக்க வழக்கங்கள், பேசும் மொழிகள் ஆகியவற்றில் இந்திய மக்கள் வேறுபட்டு இருப்பினும் ஆன்மீக உணர்வு, எளிய வாழ்வு, உயரிய சிந்தனை, விருந்தோம்பல், கலை உணர்வு, அழகுணர்வு, சமயச் சார்பற்ற தன்மை, மக்களாட்சி ஆகியவற்றில் இந்தியர்கள் என்ற உணர்வும், ஒற்றுமையும் பெற்று வாழ்ந்து உலகிற்கு முன்னோடியாக வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்கிறோம். இப்பண்பாட்டு ஒற்றுமையை பாடப்பொருளுடன் இணைத்தும், பிணைத்தும் ஆசிரியர்கள் கற்றல் அனுபவங்களாக்கி வகுப்பில் வழங்க வேண்டும். பின்வரும் வழிகளையும் பின்பற்றலாம்.

 • குழந்தைகளின் பங்கேற்புடன் பொறுப்புக்களை ஒப்படைத்து, அதன் வழியாக அவர்கள் விரும்பும் வண்ணம், பண்பாட்டு விழாக்களை அவர்களின் குழுக்களைக் கொண்டே வழிகாட்டுதல்.
 • குழந்தைகளிடம் மிகுதியாகக் காணப்படும் ஆர்வங்களை நல்வழியில் ஆற்றுப்படுத்தி, அவர்களின் ஈடுபாட்டுடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும், மறப்போம், மன்னிப்போம் என்ற மேதக்க போக்கையும் வளர்த்தல்.
 • முகாம்கள், மலையேற்றம், தோட்டம் அமைத்தல். நடைப்பயணம் போன்றவற்றை நடத்திப் பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தல்.
 • குழுநடனம், நாடகம் நடித்தல், மண் உருவங்கள் செய்தல், குழுவாகப் பாடல், நூல் நூற்றல், துணி நெய்தல் முதலானவற்றை நடத்தி நம் பண்பாட்டை வலுப்படுத்தச் செய்தல்.
 • மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, கூட்டுறவு மனப்பான்மையை ஏற்படுத்திப் பண்பாட்டை வளர்க்கலாம். மேலும் விளையாட்டு விதிகளை மதித்து நடந்து கொள்வதுபோல், நம்பண்பாட்டையையும் மதிக்கக் கற்றுக் கொள்ளவும், அதன் வழிநடக்கவும் வழிகாட்டல்.
 • பிறகுழந்தைகளுக்கு இடர் ஏற்படும்போது அவர்களிடம் அன்பு பாராட்டி, உதவிட வழி காட்டுவதன் வாயிலாக நம் இந்தியப் பண்பாட்டின் உள் இழையான அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் என்ற அருள் உணர்வை வளர்த்தல். இராமலிங்க அடிகள் “வாடிய பயிரைக் கண்டபோதல்லாம் வாடினேன்” என்று “ஆருயிர்க்கெலாம் அன்பு செயல் வேண்டும்” பாடிய முழுப் பாடல்களை என்றும் மாணவர்கள் உணர்வுடன் பாடிப் பழகிடச் செய்தல். நாமக்கல் கவிஞரின் ‘சூரியன் வருவது யாராலே” என்ற பாடலைப் பண்ணோடு இசைக்கப் பழக்குதல்.
 • ஒவ்வொரு நாளும் பலசமயக் கோட்பாடுகளை வலியுறுத்தும் கூட்டு சமய வழிபாட்டுக்கு வழிவகுத்தளித்தல்.
 • பள்ளியின் அமைவிடத்தைச் சூழ்ந்துள்ள தேசிய, மாநில, மாவட்ட மற்றும் கிராம முக்கியத்துவம் வாய்ந்த பண்பாட்டு இடங்களுக்குக் களப்பயணம் மேற்கொள்ளுதல்.
 • பிற மதத்தவர்களின் பண்டிகைக் காலச் செயல்பாடுகளின் பின்னணியில் உள்ள சரியான உட்கருத்துக்கள் நோக்கங்களை மாணவ ஆசிரியர்கள் அறிதல், தெளிதல்.
 • தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் பண்பாட்டுச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தல். பண்பாட்டுக் கருத்துக்களையொட்டிய கருத்தரங்கு, வினாடி-வினா, விவாதம் போன்றவற்றைப் பயிற்சிப் பள்ளிகளில் நடத்துதல்.
 • நம்நாட்டு மகான்கள், சித்தர்கள், ஞானிகள், ஆன்மீகவாதிகள், வரலாற்றுச் சிறப்புப் பெற்றோர் ஆகியோர் பற்றிய விவரங்களைச் சேகரிக்கச் செய்தல்.
 • பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்களைக் கண்டு களிப்பதோடு நின்றுவிடாமல், அவற்றைப் பேணிக் காக்கவும் வேண்டும்.
 • ஆசிரியர் மன்ற நிகழ்ச்சிகளிலும், இலக்கியமன்ற விழாக்களிலும், ஆண்டுவிழாவிலும் கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், கிராமிய நடனம், கரகம், நாடகம், நாட்டியம்

முதலிய கலைநிகழ்ச்சிகளைப் பண்பாட்டுக்கேற்ற வகையில் நடத்துதல் போன்றவைகளாகும்.

You May Also Like

About the Author: IniyathuAdmin