மனித குலத்திற்கு இயற்கை விடுக்கும் சிவப்பு எச்சரிக்கை

ஏனைய வருடங்களை விட இவ்வருடம் சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுகிறது.

இது மனித குலத்திற்கு இயற்கை விடுக்கும் சிவப்பு எச்சரிக்கையா?

நிலவும் வறட்சியுடனான காலநிலை தொடர்ச்சியாக எதிர்கால சந்ததியினரையும் இவ்வாறே பாதிக்கும் என எண்ணுவதில் தவறில்லை.

சுவாசிப்பதற்கான ஒக்சிஜனை உற்பத்தி செய்யும் மரங்கள் குறைவாகக் காணப்படுகின்றமை அதற்கான காரணமாகும்.

எனினும், நாளுக்கு நாள் அபிவிருத்தியைக் காரணம் காட்டி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சூழலையும் காடுகளையும் அழித்து வருகின்றனர்.

செயற்கைக்கோளை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் இன்றளவில் எவ்வளவு காடுகளை நாம் அழித்துள்ளோம் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

1882 ஆம் ஆண்டு 82 வீதமான காடுகள் இலங்கையில் இருந்தன. எனினும், 2018 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 16.5 வீதத்தால் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. மணல் அகழ்வு , அவிபிருத்தி , கட்டட நிர்மாணம் உள்ளிட்ட காரணிகளால் இவை அழிவடைந்துள்ளன. 2010 ஆம் ஆண்டளவில் காடுகள் அதிகம் அழிக்கப்படும் 4 நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்தது.

என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை மையத்தின் பேராசிரியர் ரவீந்திர காரியவசம் குறிப்பிட்டார்.

இயற்கை சமநிலையைப் பாதிக்கும் வகையில் இடம்பெறும் திட்டங்களும் சுற்றாடலைப் பாதித்துள்ளன.

வானிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு, நாடென்ற ரீதியில் இலங்கை கையொப்பங்களையிட்டுள்ளது. நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கும் நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம். காடுகளை அழிக்கும் செயற்பாடுகள் துரிதமாக தற்போது நடைபெறுகின்றன. பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், குடியிருப்புகளை அமைக்கும் செயற்பாடுகளினால் காடுகள் அழிக்கப்படுகின்றன. சதுப்பு நில சூழல் கட்டமைப்பும் தற்போது அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இயற்கை காடுகளை பாதுகாக்கும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.

என சூழலியலாளர் சஜீவ சாமிக்க வலியுறுத்தினார்.

அபிவிருத்தித் திட்டங்கள், கட்டட நிர்மாணங்கள், நீர்ப்பாசனம் , சுற்றுலா உள்ளிட்ட திட்டங்களால் நாட்டில் அதிகளவில் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

சம்பூர் அனல் மின் நிலையத்தின் கட்டுமானத்திற்காக 5000 ஹெக்டெயர் நிலம் அபகரிக்கப்பட்டது.

இதில் பாரியளவிலான நிலங்கள் காடுகளாகவே காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நகரங்களை உருவாக்கும் போது, மரங்கள் மற்றும் தாவரங்களுடன் உருவாக்கினால் வெப்பத்தை ஓரளவு குறைக்க முடியும். நீர்த்தட்டுப்பாடு, மின் நெருக்கடி ஆகிய பிரச்சினைகள் உள்ளன. அதிகளவு நீரேந்துப்பகுதிகள் காணப்பட வேண்டும். எனினும், குறைவாகவே காணப்படுகின்றன. எமது நாட்டில் காணப்பட வேண்டிய நீர் மட்டத்தின் அளவு அபாய நிலையில் காணப்படுகின்றது. மண் பாதுகாப்பு தொடர்பில் குறைந்த கரிசனை செலுத்தப்படுவதால், மலையகப்பகுதிகளில் நீரைத் தேக்கி வைக்கும் இயலுமை குறைவடைந்துள்ளது

என சூழலியலாளரும் சட்டத்தரணியுமான ஜெகத் குணவர்தன குறிப்பிட்டார்.

வசந்த காலம் தற்போது மௌனித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கையில் அதிக வெப்பநிலையான 42 பாகை செல்சியஸ் வெப்பநிலை அனுராதபுரத்தில் பதிவாகியது. மேலும் 8 செல்சியஸ் அதிகரித்தால், அடுத்த 10 வருடங்களில் மாம்பழமொன்றைக் கூட எம்மால் உற்பத்தி செய்ய முடியாது போகும். இந்தியாவின் தெலுங்கானாவைப் போன்று இலங்கையிலும் மக்கள் உயிரிழக்கும் அபாயமுள்ளது. ஒரு நிமிடத்திற்கு 20 தடவைகள் நாம் சுவாசிக்கின்றோம். ஆனால், ஒக்சிஜனை உருவாக்கும் மரங்களை நாம் வெட்டுகின்றோம். இந்த புதுவருடத்தில் பிள்ளைகளுக்கு ஆடைகளை, பரிசுப்பொருட்களை வழங்குவதோடு மரமொன்றையும் வழங்குங்கள். நாம் இறந்த பின்னர் பிள்ளைகள் வாழ்வதற்கான சுவாசத்தை அந்த மரங்கள் வழங்கும்.

You May Also Like

About the Author: IniyathuAdmin