பட்டுச்சேலை

ஒருநாள், ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது, ஒரு பட்டுச்சேலை மிதந்து வந்தது. அதை நோக்கிப் பாய்ந்தான்.

சேலையை சுருட்டி எடுத்து, தலைப்பாகை போல் கட்டிக்கொண்டு வந்தான். திடீரென ஒரு சுழலில் சிக்க, நீரில் மூழ்கினான்.

எப்படியோ, தடுமாறி சமாளித்து வெளியே வந்த போது, தலையில் கட்டியிருந்த புடவையைக் காணவில்லை.

சற்றுதூரம் கண்களை ஓடவிட்டான். சேலை எங்கோ தள்ளிப் போயிருந்தது. இனி எவ்வளவு வேகமாக நீந்திப் போனாலும் அதை எடுக்க முடியாதென தெரிந்து விட்டது.

கரைக்கு வந்த அவனது கண்கள் கலங்கின. “”ஐயோ! இந்தப் புடவையை மட்டும் என் தங்கையிடம் கொடுத்திருந்தால் அவள் எவ்வளவு மகிழ்ந்திருப்பாள்.

கிழிசல் தாவணியைத் தவிர அவள் வேறு என்ன சுகத்தைக் கண்டிருக்கிறாள்! போச்சே!” என்று வாய்விட்டு புலம்பினான்.

அப்போது, ஒரு பெண் அங்கு வந்தாள். “”தம்பி! சேலைக்குரியவள் நான். நானே அதுபோனதை விதியாக எண்ணி ஏற்றுக்கொண்டேன்.

ஆனால், அதற்கு உரிமையே இல்லாத நீ, தற்காலிகமாக உன் கையில் கிடைத்தது விட்டுப்போனதற்காக புலம்புகிறாயே! உன்னைப் போல் பலரும் அறியாமையில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த உலகில் கிடைக்கும் பொருட்களெல்லாம் உன்னுடையவை என எண்ணிக் கொண்டிருக்கிறாய்.

“எனது’ என்ற சிந்தனை தான் மனிதனை பாவம் செய்யத்தூண்டுகிறது. இப்போது, உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதே, வாழ்க்கை…இது கூட இறைவனால் தற்காலிகமாக கொடுக்கப்பட்டது தான்.

நீ என்ன கொண்டு வந்தாய்? இங்கே வந்த பிறகு பணம், புகழ், கீர்த்தி, ஏழ்மை என்று ஏதோ சிலவற்றை சம்பாதித்தாய்.

நீ போகும் போது பணமும் கூட வராது, ஏழ்மையும் உடன் வராது.
அவையெல்லாம் உனக்கு கிட்டிய தற்காலிக சம்பந்தங்களே,” என்று சொல்லி விட்டு நிற்காமல் சென்று விட்டாள்.

You May Also Like

About the Author: IniyathuAdmin