மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – உற்று கவனியுங்கள், உங்களை சிந்தனையை

உற்று கவனியுங்கள், உங்களை சிந்தனையை

சோர்வு, பயம், அருவருப்பு இதெல்லாம் நமக்குள்ளே எங்கே உண்டாகிறது ? நமது கையிலோ, காலிலோ, நுரையிரலிலோ, மூச்சுக் குழாயிலோ உண்டாவதில்லை.  நமது எண்ணங்களில் மட்டுமே நிகழ்கிறது.  அப்படியென்றால், எண்ணம் என்பது என்ன ?

யோசித்துப் பாருங்கள்!  உதட்டையும் நாக்கையும் அசைக்காமல் நமக்குள்ளேயே வார்த்தைகளை ஓடவிடும்போதுதான் எண்ணங்கள் உருப்பெறுகின்றன.

வார்த்தைகளும், வாக்கியங்களும் இல்லாமல் நம்மால் சிந்திக்க முடியாது (ஒலிகளாலும் வண்ணங்களாலும் சிந்திக்கும் இசைக் கலைஞர்கள், ஓவியங்கள், படைப்பாளிகள் போன்றவர்களை நினைத்து இந்த நேரத்தில் குழப்பிக்கொள்ள வேண்டாம்).

ஒருவர் வியாபாரம் செய்ய வேண்டும் என்று ஒரு கடை வைக்கிறார். நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது. உடனே அவர், நான் வியாபாரம் செய்வதற்கே லாயக்கு இல்லாதவன். அந்த நெளிவு சுளிவுகள் எனக்குப் போதாது  என்று வருத்தப்பட ஆரம்பித்தால்.. . தன்னை நொந்து கொள்வதற்காக மனதுக்குள் இவர் அமைத்த வாக்கியமே.. . அவரைத் தாழ்வு மனப்பான்மை உடையவராக ஆக்கிவிடும்.

அதே நபர், விபாபாரத்தில் லாபமும் நஷ்டமும் சகஜம்தான். இதில் வருத்தப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டால்.. . அவர் தேந்தெடுத்த அந்தச்
சொற்களே அவரை உற்சாகம் இழக்காமல் பார்த்துக்கொள்ளும்.

இரண்டாம் உலகப்போரின் போது நடந்த உண்மை நிகழ்ச்சி இது:

தாங்கள் சிறைப்பிடித்த யூதக் கைதிகளை வைத்து ஜெர்மானியர்கள் பல கொடுமையான பரிசோதனைகள் நடத்தியது நமக்குத் தெரியும்…

அதில் ஒரு பரிசோதனை.. .

உங்களைப் புதுமையான முறையில் சாகடிக்கப் போகிறோம்.  உடம்பிலிருந்து எல்லா ரத்தத்தையும் வெளியேற்றினால் நீங்கள் எப்படி துடிதுடித்துச் சாவீர்கள் என்று பார்க்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, சாம்பிளுக்கு இரண்டு கைதிகளைப் படுக்கையில் படுக்க வைத்து ரத்தத்தை வெளியேற்ற ஆரம்பித்தார்கள். ஜெர்மானிய படைவீரர்கள்!

கைதிகளின் உடம்பிலிருந்து வெளியேறிய ரத்தம் பக்கத்திலிருந்த பாட்டிலில் டப் டப் என்ற ஒலியுடன் விழ ஆரம்பித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த இரண்டு கைதிகளின் கண்களையும் படைவீரர்கள் கறுப்புத் துணியால் கட்டிவிட்டனர். அதில் ஒரு கைதியின் உடம்பிலிருந்து ரத்தம் வெளியேறுவதையும் நிறுத்தி விட்டார்கள்.  ஆனால், பாட்டிலில் டப் டப் என்று விழும் ஓசை கேட்கும்படி மாற்று ஏற்பாடு செய்தார்கள். இந்த டப் டப் சத்தத்திலேயே பீதி அடைந்த அந்தக் கைதி, ஐயோ  உடம்பிலிருந்து ரத்தம் போய்க்கொண்டே இருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் ரத்தம் வற்றிச் சாகப் போகிறோம்  என்று பயத்தில் நடுங்க ஆரம்பித்தான்.

பரிசோதனையின் முடிவில், உண்மையிலேயே ரத்தம் வெளியேற்றப்பட்ட கைதியும் இறந்துபோனான். தன் உடம்பிலிருந்து ரத்தம்வெளியேறுகிறது என்ற பிரமையில் இருந்த கைதியும் இறந்துபோனான்.

இரண்டாம் கைதியின் மரணத்துக்கு அவனது சிந்தனையும் சிந்தனை செய்ய அவன் தேர்ந்தெடுத்த வார்த்தைகளும்தான் காரணம்.

இதன் மூலம் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயம் எளிமையானது.

“ஒரே போரடிக்குது.. .”
“ரொம்ப டயர்டா இருக்கு”
“உடம்பே சரியில்லை”
“சனியன்  புள்ளையா இது. .. பிசாசு”

இது மாதிரியான ரெடிமேட் நெகடிவ் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். பேசும்போது மட்டும் அல்ல – உங்களுக்குள் சிந்திக்கும் போதுகூட!

நான் பல்வேறு வார்த்தைகளில் சொன்னதையே Languaging என்ற ஒரே வார்த்தைக்குள் அடக்கிவிட முடியும்.

நல்லதோ கெட்டதோ.. . உங்கள் சிந்தனைகளை நீங்கள் எடுத்த எடுப்பிலேயே கட்டுப்படுத்தத் தேவையில்லை. நினைப்பை அதன்போக்கில் ஓட விடுங்கள். எப்படிப்பட்ட வார்த்தைகளை மனதில் ஓட்டிச் சிந்திக்கிறீர்கள் என்று கூர்ந்து கவனியுங்கள். அதாவது உங்களை நீங்கள் உற்றுக் கவனியுங்கள். வேறொருவராக விலகி நின்று கவனியுங்கள்.

ஒருவகையில் தியானம் செய்வதற்கான அடிப்படைத் தகுதியும் இதுதான். இதைத் திரும்பத் திரும்பப் பயிற்சி செய்தால், ரெடிமேடான சோர்வு தரும் – உங்களை நீங்களே தளர்த்திக் கொள்ளும் – எரிச்சலூட்டும் நெகடிவ் வார்த்தைகளிலிருந்து விடுபட்டால், சுதந்திரமான, உற்சாகச் சிந்தனை உங்களுக்கு சரளமாக உருவாகும். நம்மை நாம் கட்டுப்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம்.

ஆனால், மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கோபப்படும் வார்த்தைகளைப் பேசினால் என்ன செய்வது ?

சொல்கிறேன்.. .

மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்…

மாலையில்.. சுவாமி.. இது உங்களுடையது
இரவில்.. சுவாமி.. இது என்னுடையது

கோபத்தை தூண்டிவிடும் வார்த்தைகளைப் பிறர் நம்மீது வீசினால் என்ன செய்வது? எதிராளி நம்மை மட்டம் தட்டிப்பேசினால் அதை எப்படி எதிர்கொள்வது? இது போன்ற கேள்விக்கான விடை, கௌதம புத்தரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியில் இருக்கிறது,

ஒருமுறை புத்தர் தனது பிரதான சீடரான ஆனந்தாவுடன் சென்று ஒரு வீட்டில் பிச்சை கேட்டார்.

புத்தரை பார்த்து அந்த வீட்டில் இருந்த பெண்மணி, “சோம்பேறியே கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது, உழைத்துச் சாப்பிட உனக்கு என்ன கேடு?” என்று திட்டி விரட்டினாள், ஒரு பெண், தனது குருவை இப்படித் திட்டிவிட்டாளே, என்று சீடரின் மனம் எரிமைலையாக குமுறிக்கொண்டிருந்தது.

“தயவு செய்து எனக்கு உத்தரவு கொடுங்கள். உங்களைத் திட்டிய அந்தப் பெண்ணுக்குச் சரியான பாடம் புகட்டிவிட்டு வருகிறேன்” என்று ஆனந்தா புத்தரிடம் அனுமதி கேட்டார். அவர் ஒன்றும் சொல்லாமல் நடக்கத் துவங்கினார். மண்டையைப் பிளக்கும் வெயில் அடிக்கத் துவங்கியது. தன் கையிலிருந்த கமண்டலத்தை ஆனந்தாவிடம் கொடுத்துவிட்டு, புத்தர் சிறிது நேரம் ஓய்வெடுத்ததார்,

மாலை நேரமானது. புத்தர் தனது சீடருடன் மீண்டும் பயணத்தை தொடர்ந்தார், அப்போது வழியில் சீடரின் கையிலிருந்த கமண்டலத்தைப் பார்த்த புத்தர்.  இது யாருடையது? என்று கேட்டார். அதற்கு ஆனந்தா, சுவாமி இது உங்களுடையது என்றார்.

உடனே புத்தர், அந்தக் கமண்டலத்தை வாங்கி ஒருமுறை பார்த்துவிட்டு  “இல்லை, இதை உனக்கு அப்போதே பரிசாகக் கொடுத்துவிட்டேன், அது உன்னுடையதுதான்” என்று திரும்பவும் ஆனந்தாவிடம் கொடுத்துவிட்டார்.

இரவு வந்தது, புத்தர், ஆனந்தாவின் கையிலிருந்த அதே கமண்டலத்தைச் சுட்டிக் காட்டி, இந்தக் கமண்டலம் யாருடையது? என்று மீண்டும் கேட்டார், இதற்கு ஆனந்தா, ஸ்வாமி இது என்னுடையது என்றார், இதைக் கேட்ட புத்தர் சிரித்து விட்டார்.

“இன்று மாலை உன்னிடம் இதே கேள்வியை கேட்டேன், இது உங்களுடையது என்றாய், இப்போதோ, இது என்னுடையது என்கிறாய். ஒரே கமண்டலம் எப்படி உன்னுடையதாகவும், அதே வேளையில் என்னுடையதாகவும் இருக்க முடியும்…?”

புத்தரின் கேள்வியில் சற்றே தடுமாறினாலும் ஆனந்தா நிதானமாக இப்படிப் பதில் சொன்னார்.

“சுவாமி. கமண்டலத்தைத் தாங்கள் எனக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டதாகச் சொன்னீர்கள், நானும் அதை ஏற்றுக் கொண்டேன். அதனால் கமண்டலம் என்னுடையது என்றேன், ஆனால், முதல் முறை நீங்கள் கமண்டலத்தை கொடுத்தபோது அதை நான் என்னுடையதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னிடம் நீங்கள் கமண்டலத்தைக் கொடுத்திருந்தீர்கள் என்றாலும், உண்மையில் அது அப்போது உங்களுடையதுதான்”

புன்னகையுடன் ஆனந்தாவைப் பார்த்துப் பேசினார் புத்தர்.

“இதுபோல்தான் அந்தப் பெண்மணி என்னைப் பார்துச் சொன்ன வார்த்தைகளை நான் என்னுடையதாக எண்ணி எடுத்துக் கொள்ளவில்லை எனவே, என்னைப் பார்த்துச் சொல்லப்பட்டிருந்தாலும் அந்த வார்த்தைகள் அந்தப் பெண்மணிக்கே சொந்தம். அதனால் அந்தப் பெண்மணிக்கு நீ பாடம் புகட்டப் போகத் தேவையில்லை என்றேன்.”

புத்தர் தனது சீடருக்குச் சொன்ன அறிவுரை உணர்த்துகிற உண்மை எளிமையானது.

யாராவது நம்மைப் பார்த்துச் சோம்பேறி என்று திட்டினால், அந்த வார்த்தையை நாம் நம்முடையது என்று ஏற்றுக் கொள்ளும் போதுதான் நாம் பாதிக்கப்படுகிறோம்.

நான் சோம்பேறி கிடையாது என்று நமக்குத் தெளிவாகவும் உறுதியாகவும் நன்கு தெரிந்தால், எதிராளி நம்மைப் பார்த்துச் சொன்ன சோம்பேறி என்ற வார்த்தை வெறும் பிதற்றல்  பிதற்றல் ஒரு போதும் நம்மைப் பாதிக்காது  இன்னும் கேட்டால் பிதற்றுகிறவனை நாம் ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ள மாட்டோம்.

ஆனால், சோம்பேறி என்று ஒருவர் இன்னொருவரைத் திட்டும் போது திட்டப்பட்டவர் பாதிக்கப்படுகிறார் என்றால், திட்டப்பட்டவர் உண்மையிலேயே சோம்பேறி என்றுதான் அர்த்தம் ஆகிவிடும்.

யாராவது சோம்பேறி என்று இதுபோன்றவர்களைத் திட்டினால் சோம்பேறி என்ற வார்த்தையினால் ஏற்படும் அவமானத்தைவிட நாம் சோம்பேறி என்பது உண்மைதான். இந்த உண்மை மாற்றானுக்கும் தெரிந்துவிட்டதே.. என்று நினைக்கும் போதுதான் பாதிக்கப்படுகிறார், பதிலுக்குக் கோபப்படுகிறார், அவர் இரத்த அழுத்தம் கூடுகிறது.  கண்கள் சிவக்கின்றன.

சரி, ஒருவர் உண்மையிலேயே சோம்பேறிதான். அவர் திருந்தவே முடியாதா? முடியும் உதாரணத்துக்கு இந்தக் கதையைப் படியுங்கள்.

அவர் ஒரு பெரிய பிஸினஸ்மேன். வசதிக்கும் குறைச்சலேயில்லை, எதிர்பாராதவிதமாக, அவருக்குச் சொந்தமான கப்பல் ஒன்று புயலில் அகப்பட்டு முழ்கிவிடுகிறது.  இன்னொருபுறம் தொழிலாளர் பிரச்சனையால் ஃபாக்டரியும் முடப்பட்டு விடுகிறது.  கடன் தலைக்குமேல் போய்விடுகிறது.

அவர் வீடு வாசலை எல்லாம் இழநதுவிட்டு நடுவீதிக்கு வந்துவிடுகிறார், ஐந்தே ஆண்டுகள் அவர் கடுமையாக உழைக்கிறார், இழந்த தொழிற்சாலையைவிட்ப பெரிய தொழிற்சாலையைக் கட்டுகிறார், ஒன்றுக்கு இரண்டாகக் கப்பல்கள் வாங்குகிறார், முன்பு இருந்ததைவிடப் பலமடங்கு பெரிய செல்வந்தராக மாறிவிட்டார்.

அவரிடம் நிருபர்கள் உங்களுடைய இவ் வெற்றியின் இரகசியம என்ன? என்று கேட்கிறார்கள்.

அதற்கு அவர், “முன்பு நான் தோல்வி அடைந்தது உண்மை. ஆனால் நான் தோல்வி அடைந்துவிட்டேன், வியாபாரத்தில் தோறறுவிட்டேன் என்ற ரகசியத்ததை எனக்கு நான் சொல்லவே இல்லை” அதுதான் என் இந்த வெற்றிக்கு காரணம் என்றாராம்.

பலருடைய கண்களைத் திறக்கக் கூடிய கதை இது.

உண்மையிலேயே உங்களுக்குச் சோம்பல் வரலாம், வேலை செய்வதில் ஈடுபாடில்லாமல் சோம்பேறியாக இருக்கத் தோன்றலாம். ஆனால், நான் சோம்பேறி…. எதற்கும் லாயக்கில்லாதவன்  என்று உங்கள் மீதே நீங்கள் முத்திரை குத்திக்கொள்ளாதீர்கள, அப்படி செய்தால்; நாமே நமக்கு எதிரியாக இருந்து செயல்படுவது மாதிரி ஆகி விடும்;
சரி…, நாம் என்னதான் செய்ய வேண்டும்…,?

நான் சோம்பேறி கிடையாது  என்று உங்களுக்கு நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள் என்று ஒரு தரப்பினர் சொல்வார்கள்.

இதற்கு பாஸிட்டிவ் திங்கிங்(Positive Thinking) என்று பெயரும் கொடுத்திருக்கிறார்கள், நான் சொல்லப்போவது உங்களுக்குக் கொஞ்சம் அதிர்சியாகக் கூட இருக்கலாம்.

உண்மையில், இந்த பாஸிட்டிவ் திங்கிங் நீண்ட நாளைக்குப் பயன்படாது.

மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்…

சிந்தனைக் கதவுகளை மூடாதீர்

மனதில் சோர்வு. தாழ்வு மனப்பான்மை போன்றவை தலைதூக்கும் போதெல்லாம் அதை மறைக்க “நான் ஜெயிக்கப் பிறந்தவன் நான் சாதிக்கப் பிறந்தவன்” என்று நமக்கு நாமே சொல்லி உற்சாகப் படுத்திக் கொள்வது அப்போதைக்குப் பலன் கொடுக்கலாம்., ஆனால் இந்தபாஸிட்டிவ் திங்கிங் அதிக நாளைக்கு உதவாது.

தீய எண்ணங்கள் எழும்போது ராமா… ராமா… என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் என்று ஒரு சிலர் யோசனை சொல்வார்கள். பாஸிட்டிவ் திங்கிங் என்பது ஏறக்குறைய இதே அடிப்படைதான்.

மனதில் சபலம் வரும்போது, அதை அடக்கத் தெய்வத்தின் மீது சிந்தனையைத் திருப்புவது அந்தச் சமயம் பலன் தரும், ஆனால், அதே தீ எண்ணம் அடுத்த நாளோ, அடுத்த வாரமோ மீண்டும் தலைதூக்குமே… ? அப்போதும் கடவுள் பேரைச் சொல்லித்தான் சபலத்தை அடக்க வேண்டுமா… ?

வீடு முழுதும் துர்நாற்றம். வீட்டின் ஒரு முலையில் எலி ஒன்று செத்துக் கிடக்கிறது. அது எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து எடுத்து வெளியே தூக்கிப் போட நமக்குப் பொறுமை இல்லை.  ஆனால், துர்நாற்றத்தை மறைக்கக் கட்டுக்கட்டாக ஊதுவத்தி கொளுத்தி வைக்கிறோம். கொஞ்ச நேரத்துக்கு வேண்டுமானால் செத்த எலியின் நாற்றத்தை அது மறைத்து விடும். ஆனால், வத்தி எரிந்து முடிந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நாற்றம் மீண்டும் குடலைப் பிடுங்கத் துவங்கிவிடும்.

பாஸிட்டிவ் திங்கிங்கும் இது மாதிரி தான்.

சரி… பாஸிட்டிவ் திங்கிங்குக்கு மாற்று இருக்கிறதா… ? இருக்கிறது. அதற்குப் பெயர்தான் Authentic thinking.

நீங்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

“ஐயையோ நான்படும் துன்பத்தைச் சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே… என்று வெறுப்படைந்து, இல்லை, நான் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறேன்” என்று பாஸிட்டிவ் திங்கிங் என்ற சித்தாந்தத்தின் படி மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீங்கள் முயற்சி செய்தால் மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும், அதற்குப் பதிலாக, உங்களின் சிந்தனையை நீங்களே சற்றுத் தள்ளி நின்று கவனிக்க ஆரம்பியுங்கள்.

இது கெட்ட சிந்தனை , இது நல்ல சிந்தனை என்பது மாதிரி சிந்தனைக்கு லேபிள் குத்தாமல், உங்களின் சிந்தனை மீதே வெறுப்புக் காட்டாமல் நடுநிலையோடு கவனியுங்கள். துக்கமான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ அல்லது மகிழ்ச்சியான சிந்தனையோ… அதை நீங்களே விலகி நின்று பார்க்கும் போது, உங்களுக்குள்ளே புரிந்து கொள்ளுதல் நடக்கும் இது போன்ற மனநிலையை எய்திவிட்டால் துன்பம், மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்றுதான்.

மகிழ்ச்சி எப்படி ஓர் அனுபவமோ, அதே போல் துயரமும் ஓர் அனுபவமே.
ஆனால், மனதிலே அமைதியும் தெளிவும் இல்லாத மனிதர்களுக்கு மகிழ்ச்சிகூடச் சோகமானதாக போய்விடும்

அவர் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர், அவருக்கு ஆறு பெண்கள்  எல்லோருமே கல்யாண வயதை அடைந்தவர்கள்.

ஆறு பெண்களுக்கும் எப்படி திருமணம் செய்து வைப்பது? என்று கவலைப்பட்டுக் கவலைபட்டே அவருக்கு ஒரு நாள் மாரடைப்பு வந்து விடுகிறது.
அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அந்த நேரம் பார்த்து, அவர் வாங்கி வைத்திருந்த ஒரு பரிசுச் சீட்டுக்குப் பத்து லட்ச ருபாய் விழுகிறது.  இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரிடம் சொன்னால், அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்துவிடுமோ?…… என்று பயந்த மனைவி, டாக்டரைவிட்டே இந்தச் செய்தியைத் தன் கணவரிடம் பதமாகச் சொல்லச் சொல்கிறாள்.

டாக்டர் மனோதத்துவ முறையில் காஷுவலாக அவளது கவணவரிடம் பேச்சை ஆரம்பிக்கிறார்.

உங்களுக்கு லாட்டரியில் ஒரு லட்சம் பரிசு விழுந்தால் என்ன செய்வீர்கள்…..?

நான் என் முத்த பெண்ணுக்குத் திருமணம் செய்து விடுவேன்….

சரி, இரண்டு லட்சம் விழுந்தால்.. ?

இரண்டாவது பெண்ணுக்கும் கல்யாணம் முடித்து விடுவேன்.

சரி… பத்து லட்சம் விழுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்

எனக்கெல்லாம் எங்கே டாக்டர் பத்து லட்சம் விழும் ? அப்படி ஒரு வேளை விழுந்தால், சத்தியமாக உங்களுக்கு இரண்டு லட்சம் தந்து விடுவேன்.

எதிர் பாராத இந்த இன்ப அதிர்ச்சியில் டாக்டருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார்.

மகிழ்ச்சி எப்படி ஒரு சுவையோ, அதே மாதிரி துயரமும் ஒரு சுவை.

இந்தச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வது  கஷ்டமாகக்கூட இருக்கலாம்  நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா பாகற்காயை விரும்பிச் சாப்பிடுவார்.

அப்போது, கசப்பான ஒரு பொருளை அம்மா எப்படி ரசித்துச் சாப்பிடுகிறார் என்று எனக்கு ஒரே குழப்பம்.

ஆனால், மனதுக்குப் பிடித்துவிட்டால் இனிப்பு என்பது எப்படி சுவையோ, அதே போல கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணர்ந்து கொண்டேன்.

சிறுபிள்ளையாக இருக்கும் போது, இனிப்பு ஒன்றுதான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை, என்று நமக்கு நாமே முடிவெடுத்துக் கொண்டு சிந்தனையின் கதவுகளை மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் எப்படி மூடிவிடுகிறோமோ அதே மாதிரிதான் இந்த விஷயமும்.

மகிழ்ச்சி மட்டும்தான் நல்ல உணர்ச்சி மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணர்ச்சிகள் என்று எண்ணி, வாழ்க்கையில் நாம் அநேக உணர்ச்சிகளுக்குக் கதவைத் திறப்பதில்லை.

இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல் தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது, மனது தானாகவே அமைதி அடையும், திரைகள் விலகும், உண்மைகள் புரியும், வாழ்க்கை அழகாக. அற்புதமானதாக- ஒரு மலரைப் போல மௌனமாக, மென்மையாக விரியும்.

You May Also Like

About the Author: IniyathuAdmin